நாட்டு மக்களுக்கான உரையில் மோடிக்கு நன்றி தெரிவித்த பிரேசில் அதிபர்

புதுடில்லி: கொரோனா வைரஸ் தாக்கம் குறித்து நாட்டு மக்களிடம் உரையாற்றிய பிரேசில் அதிபர் ஜெய்ர் போல்சனாரோ, ஹைட்ராக்சிகுளோரோகுயின் மூலப்பொருட்களை ஏற்றுமதி செய்ய அனுமதித்து, பிரேசில் மக்களுக்கு சரியான நேரத்தில் உதவி செய்ததற்காக பிரதமர் மோடிக்கும், இந்திய மக்களுக்கும் நன்றி தெரிவிப்பதாக கூறினார்.

கொரோனா வைரஸ் சிகிச்சையில் மலேரியா எதிர்ப்பு மருந்தான, ஹைட்ராக்ஸி குளோரோகுயின் பயனளிப்பதாக நம்பப்படுகிறது. உலகளவில் விநியோகிக்கப்படும் இம்மருந்தில், 70 சதவீதத்தை (20 கோடி மாத்திரைகள்) இந்தியா தான் உற்பத்தி செய்கிறது. உள்நாட்டு இருப்பு போதுமானதாக கருதப்படும் வரை ஏற்றுமதியை தடை செய்வதாக மார்ச் இறுதியில் அறிவிக்கப்பட்டது. தற்போது கொரோனா வைரஸ் 200-க்கும் மேற்பட்ட நாடுகளை சுற்றி வளைத்துள்ளதால், இதற்கான தேவை அதிகரித்துள்ளது. எனவே உலக நாடுகளின் தலைவர்கள் வரிசையாக, மோடியை தொடர்பு கொண்டு மருந்தை ஏற்றுமதி செய்ய வேண்டுகோள் வைக்கின்றனர்.